செந்தமிழ்சிற்பிகள்

ம.பொ.சிவஞானம் (1906-1995)

ம.பொ.சிவஞானம் (1906-1995)

அறிமுகம்

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995 (அகவை 89) சாலவான் குப்பம், சென்னை. 1956-ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாகப் போற்றப்படுபவர் ம.பொ.சிவஞானம் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு எனும் நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். 

சுதந்திர இந்தியாவில், சுதந்திர தமிழரசு அமைந்தே தீரவேண்டும்; தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகைய சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டு எனத் தமிழ்த்தேசிய முழக்கமிட்டவர் தமிழர் தலைவர் ம.பொ.சிவஞானம் ஆவார்.

மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றித் தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் போராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார். திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார்; அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்குக் கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்குக் கிடைக்கப் போராடினார்.

சிறப்புகள்

சிலம்புச் செல்வர்' என்ற விருது, சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது.

சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு 'டாக்டர்' பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தன.

மதுரைப் பல்கலைக் கழகம், 'பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கியது.

மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது.

தமிழக மேலவையின் தலைவராகப் பணியாற்றினார்.

'செங்கோல்' என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார்.

தமிழ் முரசு என்ற இதழை நடத்தினார்.

சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராகப் பணியாற்றினார்.